கையேந்த வேண்டாம்!
5/28/2018 3:41:23 PM
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. ெகாளுத்தும் வெயிலில் இருந்து பொதுமக்களுக்கு மெல்ல மெல்ல இனி விடுதலை கிடைக்கும்.
கத்திரி வெயில் முடிவதற்கு அச்சாரமாக, தென்மேற்குப் பருவமழை சற்று முன்னதாகவே இந்த முறை துவங்கியிருக்கிறது. தமிழகத்தைக் காட்டிலும், கர்நாடகா, கேரளாவில் இந்த மழை அதிகமாகப் பொழியும். டெல்டா மாவட்டங்களில் குறுவைச்சாகுபடிக்காக வழக்கமாக மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்படும். தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஜூன் 12 அன்று அணை திறக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் இந்த ஆண்டாவது இருக்குமா என்பது தெரியவில்லை.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் தென்மேற்குப் பருவ மழை தீவிரத்துடன் துவங்கியிருக்கிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையாலும், உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பாலும், கர்நாடகா தண்ணீர் திறந்துவிடக்கூடும். அது தமிழகத்தின் தேவையை நிறைவேற்றுமா என்பது சந்தேகமே. காவிரி மேலாண் ஆணையம் அமைந்து உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேற்கு மாவட்டங்களில் தற்போதே பருவமழைக்கு முன்பாக பெய்த மழையில், நீர்நிலைகள் பலவும் நிரம்பியிருக்கின்றன. மழை நீடித்தால், பில்லூர் அணை முழுக் கொள்ளளவை விரைவில் எட்டிவிடும். நீலகிரி மாவட்டத்தில் பைக்காரா, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கெத்தை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. சில நாட்களில் இவை முழுக்கொள்ளளவை எட்டிவிடும்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 172 ஏரிகளும், நூற்றுக்கணக்கான குளங்களும் இருக்கின்றன. அவை அந்தந்த மாவட்டங்களில் பாயும் ஆறுகள், நீர்நிலைகளுடன், கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்தால், ஏரி, குளங்கள் நிரம்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கால்வாய்கள் பராமரிப்பின்றிக் கிடக்கின்றன. இதனால், ஏரி, குளங்களுக்கு உரிய அளவில் நீர் செல்லுமா என்பது கேள்விக்குறி. போதிய மழை பெய்தும் நீர்நிலைகள் நிரம்ப முடியாததை என்னவென்று சொல்ல...
மழை கொட்டும்போது நீர்நிலைகளை நிரப்பாமல் கோட்டை விட்டு விடுகிறோம்.
பின்னர், கோடைக்காலம் துவங்கும் முன்பிருந்தே குடிப்பதற்கு நீர் இல்லை என்று கதறத் துவங்கிவிடுகிறோம். நீர்நிலைகள் பராமரிப்பு முறையாக நடைபெறாததே இதற்குக் காரணம். இதில் முறைகேடுகளும் நடக்கின்றன. வடகிழக்குப் பருவ மழை அடுத்த சில மாதங்களில் துவங்கிவிடும். இதற்குள்ளாவது தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும். முடிந்த அளவு நீர்நிலைகள் தூர்வாரப்பட வேண்டும். மழைநீரை எந்தளவு அதிகமாகச் சேமிக்க முடியுமோ அந்தளவு சேமிப்பதே நன்று. இருக்கின்ற நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தாலே தண்ணீருக்காக பிறரைக் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது. அப்படியிருந்தும், இதில் மெத்தனம் காட்டுவதுதான் விந்தை!