கலைப்பொக்கிஷங்கள்
5/31/2018 4:26:12 PM
தஞ்சை பெரிய கோயில் (பிரகதீஸ்வரர் ஆலயம்) என்றாலே பிரமாண்டம். 1004ல் துவங்கி 1010க்குள் ஆறே ஆண்டுகளில், கட்டிடக் கலையில் இன்றளவும் விஞ்சி நிற்கும் இக்கோயிலை, ராஜராஜ சோழன் கட்டி முடித்தான். 216 அடி உயரத்தில் அமைந்த இக்கோயில் விமானம் தமிழகத்திலேயே உயரமானது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. அதை விமானத்தின் உச்சிக்கு எப்படிக் கொண்டு சென்றனர் என்பதே இன்றளவும் வியப்பாக உள்ளது. மூலவர் பிரகதீஸ்வரர். சிவலிங்க பாணத்தின் உயரம் 12.5 அடி. சுற்றளவு 23 அடி. இங்குள்ள மகா நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடை உள்ளது.
கோயிலுக்கு ராஜ ராஜ சோழன் 66 தெய்வத் திருமேனிகளை(சிலைகள்) நன்கொடையாக வழங்கினான். கல்வெட்டுகளில் இதுகுறித்த குறிப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவற்றில் மன்னர் ராஜராஜன்(உயரம் 75 செ.மீ), ராணி(பட்டத்தரசி) லோகமாதேவி(55 செமீ) உள்பட 13 பஞ்சலோகச் சிலைகள் மதிப்பு வாய்ந்தவை. ராஜராஜசோழன் சிலையின் இன்றைய மதிப்பு ரூ.100 கோடி; ேலாகமாதேவி சிலையின் மதிப்பு ரூ.50 கோடி. இவை கோயில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தன. 50 ஆண்டுகள் முன்பு, இவை கொள்ளையடிக்கப்பட்டன. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தும் இவை எங்கிருக்கின்றன என்ற மர்மம் விலகவில்லை. தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரித்து ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புப்புலனாய்வுக்குழு அமைக்க உத்தரவிட்டது. இந்தக்குழுவினர் பல்வேறு சிலைகளை மீட்டெடுத்ததோடு குற்றவாளிகளையும் கைது செய்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சீனிவாசக் கோபாலாச்சாரி மூலம் சென்னையைச் சேர்ந்த கவுதம் சாராபாய் என்பவருக்கு பல கோடி ரூபாய்க்கு ராஜராஜன், லோகமாதேவி சிலைகள் விற்கப்பட்டதையும், பிறகு 2 சிலைகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேசன் காலிகோ மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பதையும் இக்குழுவினர் கண்டறிந்தனர். இதையடுத்து, ஆதாரங்கள், பட்டயக்குறிப்புகளைக் காட்டி, பொன்மாணிக்கவேல் இந்த 2 சிலைகளையும் மீட்டிருக்கிறார். இந்த சிலைகளைக் கும்பகோணம் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரும் போது, பெருமளவில் திரண்டு பொதுமக்கள் வரவேற்க இருக்கின்றனர்.
சிலைக் கடத்தல் மற்றும் முறைகேடுகளில் தொடர்புடையவர்களைச் சிலைக் கடத்தல் தடுப்புச் சிறப்புப் புலனாய்வுக்குழு கண்டறிந்து வருகிறது. இக்குழு சுதந்திரமாகச் செயல்படுவதற்கு நீதிமன்றத்தின் ஒத்துழைப்பு கிடைத்திருப்பதால், அரசியல் தலையீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. இதனால், குற்றவாளிகளைக் கண்டறிவதையும், சிலைகளை மீட்டெடுப்பதையும் முழுவீச்சில் இக்குழு மேற்கொள்ள முடிகிறது. இதுதொடர்ந்தால், பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருவதோடு, கொள்ளையடிக்கப்பட்ட விலைமதிப்பில்லாத பல சிலைகளை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு உருவாகும். தமிழகத்தின் கலைப்பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படும்.