இன்ஜினியரிங்கில் சாதிக்கலாம்!
6/3/2018 2:53:25 PM
குழந்தை பிறக்கும்போதே இன்ஜினியரா, டாக்டரா என்று கேள்வி கேட்பவர்கள் இனி இருக்க மாட்டார்கள். காரணம், வீட்டுக்கு வீடு இன்ஜினியர்கள் இப்போதே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் வேலை பார்ப்பவர்களாகவோ, சுய தொழில் புரிபவர்களாகவோ இருக்கிறார்களா என்றால் இல்லை. மற்றத் துறைகளில் இருப்பவர்களைப் போன்றே வேலைக்காக காத்திருப்பவர்களாக இவர்களில் பலர் இருக்கின்றனர்.
இருப்பினும் இன்ஜினியரிங் படிப்பின் மீதான மோகம் குறைந்திருக்கிறது என்று கூறுவது மேலோட்டமான கண்ணோட்டமே. சிறந்த இன்ஜினியர்களுக்கு வாய்ப்புகள் இன்னும் காத்துக்ெகாண்டிருக்கின்றன. படித்தால் மட்டும் போதாது; அனுபவப் பயன்பாடும் அவசியமாக இருக்கிறது.
தமிழகம் முழுவதும் 564 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. பி.இ. பி.டெக் படிப்புகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் படிப்பில் சேர விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் சேர 1.41 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்த முறை விண்ணப்பித்தவர்கள் அதிகரித்திருக்கின்றனர். இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் கவுன்சலிங் அறிமுகமாகிறது. கவுன்சலிங் தேதி இனிமேல்தான் அறிவிக்கப்படும். அதேசமயம் சான்றிதழ் சரிபார்ப்புத் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் இடம் கிடைப்பது நிச்சயம். அதேசமயம் விண்ணப்பித்த அனைவரும், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வார்களா என்பதும் சந்தேகமே.
குறிப்பாக விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதத்தினரே படிப்பில் சேரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. மருத்துவக்கல்விக்கு எப்படி அவசியமாக இருக்கிறதோ, அதைப்போன்றே இன்ஜினியரிங் படிப்புக்கும் இனி தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. கட் ஆப் மதிப்பெண் குறைந்திருப்பதால், விரும்பிய கல்லூரிகளிலேயே விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும் என்ற கருத்து மாணவர்களிடம் நிலவுகிறது. மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காவிட்டால், இன்ஜினியரிங் சேரலாம் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கிறது. இதனால்தான் இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
இருப்பினும், தரம் வாய்ந்த இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த முறையும் கடும் போட்டி நிலவும் என்பது உறுதி. தேசிய அளவிலான நுழைவுத்தேர்வில் பங்கேற்காமல், கல்லூரியில் சேர்வதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்கின்றனர். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகச் சேராமல், தங்களுக்குப் பிடித்த துறை, சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ள பாடப்பிரிவுகளில் சேர்வதுதான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பதற்கான வழி. அதற்காக, கல்வியாளர்களின் ஆலோசனைகளைக் கேட்பதில் தவறில்லை.