மாய வலை
8/29/2018 4:07:45 PM
இணைய உலகில், சவால்களுக்குக் குறைவில்லை. வாழ்க்கைக்கான சவால்களைக் காட்டிலும், விசித்திரமானவையாகவும், வினோதமானவையாகவும் அவை உருவெடுத்து வருகின்றன. சமூக வலைதளங்கள், இன்றைய இளைஞர்களின் வாழ்வியலுடன் இணைந்தவையாக மாறியிருக்கின்றன. வீடியோக்கள், மீம்ஸ்களுடன் வலம் வந்த இவை, தற்போது பல்வேறு சவால் விளையாட்டுகளுடன் உலா வருகின்றன. சில மாதங்களாக, கிகி என்ற சவால், அதிவேகமாகப் பரவியது. ஓடிக்கொண்டிருக்கும் காரில் இருந்து இறங்கி, அதனுடனே சென்று நடனமாடுவதே இந்தச் சவால். மேற்கத்திய நாடுகளில் துவங்கி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இதன் மீதான மோகம் அதிகரித்தது. இளைஞர்கள் என்றில்லாமல், பிரபலங்களும் கிகி சவாலில் பங்கேற்று சாகச வீடியோக்களைப் பதிவேற்றினர். இவை சுவாரசியமானவை என்றாலும், சவாலில் ஈடுபட்ட பலர், விபத்துகளில் சிக்கினர். நாடு முழுவதும் போலீசார் இதுகுறித்து எச்சரிக்கும் அளவு நிலைமை விபரீதமானது. பல்வேறு நாடுகள் இதற்குத் தடைவிதித்தன.
தற்போது ‘மேரி பாப்பின்ஸ்’ என்ற சவால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் குடையுடன் ஏதேனும் உயரமான இடத்தில் இருந்து குதிக்க வேண்டும் என்பதே இந்தச் சவால். குடையைக் கற்பனையில் பாராசூட் போல் கருதிக்கொள்ள வேண்டுமாம். இந்தச் சவாலை ஏற்று இளைஞர்கள் பலர், தற்போது குடையுடன் பாலம், வீட்டு மாடி, மரம் போன்றவற்றில் இருந்து குதித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டும் வருகிறது. இதில், பிரபலங்களும் இனி களமிறங்கலாம். சவாலில் ஈடுபடும் பலருக்குக் கை, கால்கள் உடைந்து வருகின்றன. சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் கூட, இந்தச் சவாலில் இருந்து விலகப் பலருக்கும் மனம் இருப்பதில்லை.
புளூவேல், மோமோ போன்ற ஆபத்தான வீடியோ விளையாட்டுகள் ஏற்கனவே சிறுவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து வலம் வருகின்றன. இதனால் உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரங்களும் நிகழ்கின்றன. மேரி பாப்பின்ஸ் போன்றவை இவற்றுடன் ஒப்பிடும்போது, ஆபத்தானதில்லை என்றாலும், இளைஞர்களின் மனதைத் திசைதிருப்பக்கூடியவையாக இருக்கின்றன. பொழுதுபோக்கு என்ற அளவுடன் நிறுத்திக்கொள்ளாமல், இதில் மூழ்கும்ேபாது இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை.
உலகில் சாதனை படைக்க, கடின உழைப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்திருக்க வேண்டும். ஆனால், சமூக வலைதளச் சவால்களிலும், வீடியா விளையாட்டுகளிலும் கற்பனை மிகுந்திருந்தாலும், அவை மாய உலகின் வஞ்சக வலைகள்தான். மேலும் நேரமும் வீணாகிறது. காலம் பொன் அல்லவா! சமூக வலைதளங்களில் ஆக்கபூர்வமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் புறந்தள்ளலாமா!