மத்திய அரசு பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பம்
6/4/2013 12:40:37 PM
சென்னை: கிண்டியில் உள்ள மத்திய அரசின் காலணி பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ பயிற்சி படிப்பிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை கிண்டியில் 1957ல் நிறுவப்பட்ட மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சிஎப்டிஐ எனும் ஒரு வருட பயிற்சி நிலையத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியருக்கு ஒரு ஆண்டு காலணி தொழில் நுட்பத்திற்கான சான்றிதழ் படிப்பும், 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிஎப்டிபி எனும் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும், ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பிஜிடிஎப்டி எனும் ஓராண்டு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நவீன இயந்திரங்களைக் கொண்டு அனுபவமிக்க ஆசிரியர்களால் 70 சதவீதம் செயல் முறை பயிற்சியுடன் கூடிய இந்தப்படிப்பின் இறுதியில் வளாகத் தேர்வின் மூலம் 100 சதவீதம் வேலைவாய்ப்பும் செய்து தரப்படுகிறது. மேலும் எஸ்.சி, எஸ்..டி மாணவ, மாணவியருக்கு கல்விக்கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. வங்கிக்கடன் வசதியும் உண்டு. மாணவர்களுக்கு விடுதி வசதி செய்து தரப்படும்.
மேலும் விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை பெற www.cfti.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இயக்குநர் சிஎப்டிஐ, 65/1 ஜி.எஸ்டி ரோடு கிண்டி, சென்னை-32.என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி-9443006257 எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.