ராமலிங்க சவுடாம்பிகை கோயில் விழா உடலை கத்தியால் கீறி நேர்த்திக்கடன் ரத்தம் சொட்ட, சொட்ட ஊர்வலம்
6/11/2016 12:14:16 PM
கோவை: கோவையில் உள்ள சவுடாம்பிகை அம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் உடலை கத்தியால் கீறிக்கொண்டு ஊர்வலம் சென்றனர்.கோவை ராஜவீதியில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம், தேவல மகரிஷி பிரதிஷ்டை மற்றும் பெரிய அம்மன் உற்சவ விழா நடந்து வருகிறது. இவ்விழாவின் ஒருபகுதியாக நேற்று லட்சார்ச்சனை நடந்தது. அன்று மாலையில் பராக்கத்தி ஊர்வலம் நடந்தது.இதில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டு சென்றனர். அவர்கள் சாயிபாபா காலனி, ராஜா அண்ணாமலை ரோடு, கிழக்கு அழகேசன் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
கொட்டும் மழையில் ‘வேசுக்கோ, தீசுக்கோ’ என கோஷத்துடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கத்தி போட்டனர். கூட்டம் அதிகமாக இருந்தால் கத்திபோட இடையூறு ஏற்படும் என்பதால் பல்வேறு குழுக்களாக பக்தர்களை பிரித்து கத்திபோட போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.மங்கள வாத்தியம் முழங்க அசுவத்தின் மீது ஆவாஹகனம் செய்து, அம்மன் அருள் பெற தேவாங்க குல மக்கள் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து இரவு தெப்பக்குள மைதானத்தில் அன்னதானம் நடந்தது. பக்தர்கள் ரோட்டில் கத்திப்போட்டு பக்தி பரவசத்துடன் வந்ததை காண மக்கள் கூட்டம் குவிந்தது.இன்று அம்மன் அபிஷேகம், ஜோதி அழைப்பு, சிம்ம வாகனத்தில் வீதியுலா, நாளை திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.