சென்னையில் அடுத்தடுத்து கைவரிசை பெண்ணை மார்பில் எட்டி உதைத்து செயின் பறிப்பு
6/24/2019 3:06:07 PM
சென்னை: சென்னையில் நடந்து சென்ற பெண் அதிகாரி உட்பட 4 பேரை தாக்கி 10 சவரன் செயினை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் சுதாதேவி(57). இவர் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். நேற்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று விட்டு கோயில் குளம் அருகே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்னால் வந்த மர்ம நபர்கள் சுதாதேவியை வழிமறித்து முகவரி கேட்பது போல் நடித்து, அவர் அணிந்து இருந்த 5 சவரன் செயினை பறித்தனர். அப்போது தடுக்க முயன்ற சுதாதேவியை கடுமையாக தாக்கி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுதாதேவி ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த செல்வி(35). இவர் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் செல்வியிடம் முகவரி கேட்பது போல் நடித்து திடீரென அவர் அணிந்து இருந்த 5 சவரன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்து கொண்ட செல்வி தனது செயினை கொள்ளையர்கள் பறிக்காதபடி பிடித்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் செல்வியை நடுச்சாலையிலேயே அவரது மார்பில் எட்டி உதைத்து கடுமையாக தாக்கி மீண்டும் செயினை பறிக்க முயன்றனர். ஆனால் செல்வி திருடன் திருடன் என பலமாக சத்தம் போட்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் செல்விக்கு கடுமையாக காயம் ஏற்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயம் காரணமாக செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மயிலாப்பூர் ராமகிருஷ்ணா 2வது தெருவை சேர்ந்தவர் கபாலி. இவரது மனைவி சாந்தா(65). இவர் நேற்று முண்டகக்கண்ணியம்மன் கோயில் அருகே நடந்து செல்லும் போது அவர் அணிந்து இருந்த 1 சவரன் செயினை பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர். இதுகுறித்து சாந்தா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல், ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்ற ெபண் ஒருவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரை பலமாக தாக்கி செயின் பறிக்க முயன்றனர். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் சத்தம் கேட்டு ஓடிவருவதை பார்த்து கொள்யைர்கள் தப்பி ஓடிவிட்டனர். அடுத்தடுத்த 4 இடங்களில் பெண்களை தாக்கி செயின் பறித்தது ஒரு கும்பல் தான் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் பைக் கொள்ளையர்களின் படங்களை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் ஒரே நாளில் 4 இடங்களில் செயின் பறிப்பு நடந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.