கணவர் கொடுமைபடுத்துவதாக கூறி எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் திடீர் தர்ணா
3/23/2023 5:48:21 PM
ஈரோடு: கணவர் கொடுமை படுத்துவதாக கூறி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நித்யா(30). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 9 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் ஈரோடு லட்சுமி தியேட்டர் பகுதியை சேர்ந்த கார்மெண்ட்ஸ் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் வாலிபரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நித்யா 2வது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நித்யாவின் நடவடிக்கைகள் மீது சந்தேகமடைந்த வாலிபர் அடித்து உதைத்து தாக்கி வருவதோடு மனரீதியாகவும் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே ஈரோடு வடக்கு காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நித்யா புகார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், முதல் திருமணத்தை நித்யா முறைப்படி விவாகரத்து பெறாமல் 2வதாக வாலிபரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போலீசார் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை நித்யா ஈரோடு எஸ்.பி. அலுவலக வளாகத்தில் தன்னை கொடுமைபடுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கணவருக்கு உடந்தையாக இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.